Monday, October 12, 2009

மகாத்மாவின் வாழ்விலே


காந்தியடிகள் கண்காட்சி ஒன்றுக்கு சென்றிருந்தார். அங்கு ஒருவர் அவருக்குத் துணையாக கண்காட்சியைப் பற்றி விளக்கம் அளித்துக் கொண்டே வந்தார்.ஒரு இடத்தில் அருகருகே இரண்டு தேனீக்கள் வளரும் பெட்டி இருந்தது. அதைக் காட்டிய அவர், "ஒரு பெட்டியில் உள்ள தேனீ மறந்தும் கூட அடுத்த பெட்டிக்குப் போகாது. எதிர்பாராமல் போக நேர்ந்தால் அடுத்த பெட்டியில் உள்ள தேனீக்கள் புதிதாக நுழைந்த தேனீயைக் கொன்று விடும்" என்றார்.இதைக் கேட்ட காந்திஜி வாயில்லாப் பூச்சியாக இருந்தாலும் அதற்குண்டான அறிவுத் திறமையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். அப்போது விளக்கம் அளித்துக் கொண்டு வந்தவர் முதல் பெட்டியின் வாயிலில் இருந்த ஒரு தேனீயை பிடித்தி பக்கத்துப் பெட்டியின் நுழைவாயிலில் வைத்து விட்டார்.உடனே காந்திஜி குறுக்கிட்டு, "வேண்டாம் நீங்கள் சொல்லியதே போதும். நான் புரிந்து கொண்டேன். அந்த உயிரை ஹிம்சை பண்ண வேண்டாம்." என்றார்.சொல்லி முடிப்பதற்குள் அந்த ஆசாமி தேனீயை பக்கத்துப் பெட்டியின் உள்ளே வைத்து விட்டார். உடனே அந்த பெட்டியிலிருந்த தேனீக்கள் அனைத்தும் ஒன்று கூடி இந்தத் தேனீயைக் கொட்டிக் கொன்று வெளியே தள்ளி விட்டன. அனைத்தும் சில வினாடிகளிலேயே முடிந்து விட்டன.இந்தக் காட்சியைக் கண்ட காந்திஜியின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த மனிதரைப் பார்த்து, "ஓர் உயிர் மாண்டு போக காரணமாக இருந்து விட்டீர்கள். உம்மால் உயிர் தந்து அதைப் பிழைக்க வைக்க முடியுமா? இனி நான் இந்தக் கண்காட்சியைக் காண மாட்டேன்" என்று சொல்லி வருத்தத்துடன் திரும்பி விட்டார்.காந்தியடிகள் சிறிய உயிரினமான தேனீயின் உயிர் சித்திரவதையைக் கூட விரும்ப மாட்டார். அனைத்து உயிரிடத்திலும் அன்பு கொண்டவர் அவர்.
காந்திஜி வெள்ளையனே வெள்ளையேறு என்று முழக்கமிட இந்தியர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மக்கள் காந்தியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.
இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இது பற்றிய பேச்சு வந்தது. போராட்டத்தை எந்த வழியில் அடக்கலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது சர்ச்சில் எழுந்து கீழ்கண்டவாறு கூறினார்.
"இந்த காந்தி துப்பாக்கி ஏந்தி போரிட்டால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கி கொண்டு போராடினால் விமானம் கொண்டு அழித்திருப்பேன். ஆனால் அவரோ ஆயுதங்களைப் புறக்கணித்துவிட்டு அகிம்சை, சத்தியம் இவைகளையே ஆயுதமாகக் கொண்டு போராடுகிறார்கள். இவற்றை மழுங்கடிக்கக் கூடிய ஆயுதங்கள் உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் அவரை வெற்றி கொள்ள முடியவில்லை. பணிந்து போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. "
சர்ச்சில் இப்படிக் கூறியது அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களைத் திகைக்க வைத்தது.
ஓர் சமயம் ஓர் ஆங்கிலப் பத்திரிகையாளர் காந்தியை சந்தித்துப் பேசினார். அப்போது காந்தியை கிண்டல் செய்யும் நோக்கத்துடன், ""காந்திஜி, உங்கள் மக்கள் ஏன் உங்களைத் தங்கள் பிரதிநிதியாக ஏற்றுக் கொண்டனர்? வேறு சிறந்த தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?'' என்று கேட்க, உடனே மஹாத்மா காந்தி பெருந்தன்மையாக.... ""உங்களை (ஆங்கிலேயர்) சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்'' என்றார்.
காந்திஜி ஒரு நாள் சலவைக்கூலி அதிகமாக ஆவதைக் கவனித்தார். மேலும் சலவைக்குப் போடப்பட்ட துணிகள் குறித்த காலத்தில் கிடைக்காமல் இருந்தன. எனவே, துணிகளைத் தாமே சலவை செய்வது என்ற முடிவுக்கு வந்தார்.
உடனே சலவை செய்யும் முறைகளை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கி வந்து படித்தார். சலவை செய்யும் முறைகளையும், இஸ்திரி போடுவது குறித்தும் கற்றுக் கொண்டார்.
முதன்முறையாக அவர் சலவை செய்த உடையைப் போட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கிருந்தவர்களெல்லாம் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அதன் காரணம் பின்னால்தான் தெரிந்தது.
முதன்முறையாதலால் காந்திஜி சலவை செய்த சட்டைக்கு அதிகமாகக் கஞ்சி போட்டு விட்டார். அதனால் அவருடைய சட்டைக் காலரிலிருந்து கஞ்சிப்பசை காய்ந்து உதிர்ந்து கொண்டிருந்தது. இதைக்கண்டுதான் மற்றவர்கள் சிரித்தார்கள். ஆனால், காந்திஜி பிறர் சிரிப்பதைப் பற்றி என்றுமே கவலைப்படுவதில்லை. தமது செயலில் மட்டும் கருத்தாக இருப்பார்.
சலவைத் தொழிலைத் தாமே செய்தது போல் முடிவெட்டும் தொழிலையும் அவரே செய்யத் தொடங்கினார்.
ஒருநாள் காந்திஜி முடிவெட்டும் கடை ஒன்றுக்குச் சென்றார். அங்கே முடி வெட்டியவர் ஓர் ஆங்கிலேயர். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுக்கு முடி வெட்டமாட்டார்கள். ஆகவே, அவர் காந்திஜிக்கு முடிவெட்ட மறுத்து விட்டார். அத்துடன் ஏளனமாகவும் பேசினார். இதனால் காந்திஜியின் மனம் புண்பட்டது.
காந்திஜி உடனே கடையில் முடி வெட்டும் ஒரு கத்தரி வாங்கிக் கொண்டார். கண்ணாடியின் முன் நின்று தாமே முடிவெட்டிக் கொண்டார். முன்பக்கம் ஓரளவு சரியாகயிருந்தாலும் பின்பக்கம் சரியாக அமையவில்லை. இருப்பினும் அப்படியே நீதிமன்றத்திற்குச் சென்றார்.
நீதிமன்றத்தில் எல்லோரும் காந்திஜியைப் பார்த்து சிரித்தார்கள். உங்கள் முடியை எலி கத்தரித்து விட்டதா? என்று கேலி செய்தார்கள். காந்திஜியோ, "வெள்ளைக்கார நாவிதன் என்னுடைய கருப்பு முடியை வெட்ட மறுத்து விட்டான். ஆகையால் நானே வெட்டிக்கொண்டேன்" என்று பதில் சொன்னார். அதற்குமேல் அவர்கள் பதில் ஏதும் பேசவில்லை. காந்திஜியும் தாமே முடிவெட்டிக் கொள்வதையும் நிறுத்தவில்லை.
தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ள வேண்டும். எந்த வேலையும் தாழ்வானதில்லை, எல்லாம் உயர்ந்தவைதான்." என்பது காந்திஜியின் கொள்கை. இதை அவர் தம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி அதன்பிறகே பிறருக்கு எடுத்துச் சொன்னார்.

7 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான தகவல்கள்! நன்றி!

butterfly Surya said...

அருமையான பதிவு.

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துகள்.

Venkatesh said...

தங்களுடைய வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.....

Anonymous said...

take out lot of utility tools from your site. even i have very high internet connection, taking too much time to load your page.

ராஜ நடராஜன் said...

நல்ல தகவல்கள்.ஸ்டைல மாத்துங்க!கூடவே டெம்ளட்.குட்டித்தூக்கம் போட்டு கண்ணைத் திறக்கும் நேரம்:)

Dr.எம்.கே.முருகானந்தன் said...

அருமையான பதிவு.

Santhosh said...

Hi,

It is a good one to read ,as I came to know about one general thing(Bees Character)and also about soft corner of our great Gandhiji towards small living things.

Santhosh

Post a Comment