Saturday, October 24, 2009

காற்றாலை பயணம்

நான் என் அலுவலக வேலையாக நாகர்கோவில் வரை சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து நான் நாகர்கோவில் செல்வது இது இரண்டாவது முறை. முதல் முறை என் பெற்றோரோடு என் சிறு வயதில் சென்றிருந்தேன்.அப்பொழுது போகின்ற வழியில் ஒன்டிரண்டு காற்றாலைகளை பார்த்ததுண்டு. என் அப்பாவிடம் அதைப் பற்றி கேட்ட ஞாபகம்..... ஆனால் இப்பொழுது சென்று பார்க்கையில் திருநெல்வேலியை கடந்தவுடன் வழி நெடுகிலும் இந்த காற்றாலைகள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளன. இந்தியாவிலேயே தமிழகம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வதிலும் முதலிடம் வகிக்கிறது என்று ஒரு தினசரி மூலம் நான் அறிந்ததுண்டு. அது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று நான் பார்த்த பொழுது தான் தெரிந்து கொண்டேன்.



முன்பெல்லாம் சில அர்ஜுன் படங்களில் வில்லனை அறிமுகம் செய்யும் காட்சியில் சில காற்றாலைகள் ஓடும் அருவியில் வைக்கப்பட்டு சுற்ற வைத்துக் கொண்டிருப்பார்கள்.வில்லன் கோஷ்டியினர் அதன் மூலம் மின்சாரம் எடுப்பார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது......



சரி இந்த 'wind mills', காற்றாலைகள் என்ன தெரியுமா? ராட்சத அலகுகள் ('Blades') கொண்ட காத்தாடி ! நம்ம சின்ன வயசிலே பனை மட்டையை எடுத்து ஒரு குச்சியிலயோ அல்லது கருவேல மரத்தின் முள்ளிலோ கட்டி அது கீழே விழாமல் இருப்பதற்க்காக ஒரு ஆட்டுப் புழுக்கையை அந்த முள்ளின் நுனியில் வைத்து வேகமா ஓடிறப்ப சுத்திகிட்டே இருக்குமே! அது நாம் ஓடும் பொழுது காற்றின் விசையாலே சுத்திறதை எத்தனை நாள் பார்த்து சந்தோசப்பட்டிருப்போம்.....சமயத்திலே, அதுக்கு வர்ணம் எல்லாம் பூசி ஒடறப்ப அழகு பார்த்திருப்போம். இதெல்லாம் நான் அந்த பெரிய காற்றாலைக்கு முன் நின்று யோசித்துப் பார்த்தேன்.அந்த சுட்டெரிக்கும் வெயிலில் என்னால் ஒரு ஐந்து நிமிடம் கூட நிற்க முடியவில்லை.அப்பொழுதெல்லாம் வீட்டில் எவ்வளவு அடி வாங்கி, சுட்டெரிக்கும் வெயில் என்று பாராமல் இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறோம் என்று மனசுக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம். இதெல்லாம் நகர வாசிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.வேண்டுமென்றால் அவர்கள் ரெடிமேட் காத்தாடிகளை வைத்து விளையாடிருப்பார்கள்.


அது இப்ப நாம் வாழ தேவையான சக்தி கொடுக்குதுன்னா பார்த்துக்கங்களே! இந்த ராட்சத காற்றாலை பண்ணைகளை நீங்க திருநெல்வேலியிலிருந்து கன்னியாக்குமரி போறப்ப நிறைய பார்த்திருக்கலாம்! அது காலி மைதானத்திலே இந்த நூற்றுக்கணக்கான காற்றாலைகளை நிர்மானித்து அதிலிருந்து மின்சாரம் எடுப்பது! இது மாதிரி நல்ல காத்தடிக்கும் இடங்கள்ல இதை நிர்மானிச்சா, அந்த காத்தின் விசையால் ராட்சச காத்தாடிகள் சுழண்டு அந்த காத்தாடிகளோட இணைக்கப்பட்ட கியர்களும் சுழன்று வட்டமா சுத்துற விசையை கியர் மூலம் மாத்தி அதை ஒரு பெரிய செங்குத்தான தண்டின் ('Tubular shaft')வழியா அந்த விசையை கடத்தி பிறகு அந்த செங்குத்து தண்டுடன் இணைக்கப்பட்ட இன்னொரு சுத்தும் தண்டின் வழியால் இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்களை இயக்கி மின்சாரம் எடுப்பதே இந்த காற்றாலை மின்சாரம்! இதுக்குன்னு நிலம் வாங்கி இதை நிர்மானிச்சு மின்சாரம் எடுக்க அரசாங்கமே செலவு செய்து! சில சமயம் தனியீட்டார்களின் முதலீடுகளாலும் இது நிர்மானிக்கப்படுகிறது! இப்பொழுதெல்லாம் தனியார் நிறுவங்களின் முதலீடுகள் தான் இந்த துறையில் மேலோங்கி இருக்கிறது. இது போன்று எடுக்கப்படும் மின்சார செலவு கம்மி, ஆனால் ஒரு காற்றாலையின் விலை ஒரு கோடியிலிருந்து இருபது கோடி வரை......அப்புறம் கழிவுகளால் உண்டாகும் மாசு எதுவும் ஏற்படுத்தவதில்லை!
இந்த காத்தாடி இன்னைக்கு நேத்து வந்ததில்லை, இது ஒரு பழைய தொழில்நுட்பம்! அதாவது இதை 12ம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிச்சிட்டாங்க! அதிகமா இதன் உபயோகம் ஐரோப்பாவில் தான் முதல்ல இருந்தது, அதுவும் ஹாலந்து நாட்டில் மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகளால் இயங்கப்பட்ட கிணத்து தண்ணி எடுத்து இரைக்கும் கருவிகளால் செஞ்சாங்க, அதாவது நீர்பாசன வசதிகளில் இந்த காற்றாலைகள் ஒரு முக்கியமான அங்கம்! அப்பறம் இந்த இரயில்வே நெட்வொர்க் அந்த காலத்திலே அதிகரிச்சோன, நீராவி இஞ்சின்களுக்கு அங்கங்க தண்ணி இரைச்சு ஊத்த இந்த காற்றாலைகளை பயன் படுத்தினாங்க! அமெரிக்காவில , 1930க்கு முன்னே மொத்த விவசாயமும் இந்த காற்றாலைகள் கொண்டு தான் செஞ்சாங்க! அந்த காலத்திலே விவசாயம் மட்டுமில்லை மக்கா சோளம் அரைக்கவும் இந்த் காற்றாலை விசையை உபயோகப்படுத்தினாங்க! ஆனா இந்த மலிவான மின்சாரம் கிடைச்சோன இந்த காத்தாடிகள் அப்படியே செத்து போச்சு! இப்ப எண்ணெய் விலை அதிகம்னோன பழையபடி தூசி தட்டி எடுத்து திருப்பி எப்படி இன்னும் சிறப்பா காற்றாலைகள் நிறுவலாம்னு ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் நம்மவர்கள் பெற்றிருப்பது தமிழர்களாகிய நமெக்கெல்லாம் பெருமை தான்......


No comments:

Post a Comment