காந்திஜி தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது நடந்த சம்பவம் இது. இஸ்லாமிய இளைஞன் ஒருவன் காந்திஜியை சந்தித்தான். ''பாபுஜி! எனக்கு மட்டும் ஆங்கிலம் தெரிந்திருந்தால், நிறைய சம்பாதிப்பேன். ஆனால் இப்போது, அரை வயிற்றுக்குத்தான் என்னால் சம்பாதிக்க முடிகிறது!'' என்று வருத்தத்துடன் கூறினான். உடனே காந்திஜி, ''கவலைப்படாதே! இனி, தினமும் உனக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறேன்'' என்றார். இளைஞன் மகிழ்ந்தான் எனினும் தயக்கத்துடன், ''ஆனால், பாபுஜி... வேலையை விட்டு விட்டு, தினமும் என்னால் இங்கு வர முடியாதே!'' என்றான்.அவனைப் பார்த்துப் புன்னகைத்த காந்திஜி, ''அப்படியானால், தினமும் நானே உனது இடத்துக்கு வந்து கற்றுத் தருகிறேன்!'' என்றார். அதன்படி, தினமும் சுமார் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று, அந்த இளைஞனுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்தாராம் காந்திஜி!
தன் ஆசிரமத்தில் உள்ள சாலையில் நடந்து கொண்டிருந்தார் காந்திஜி. அன்று அவர் மௌன விரதம். வழியில், இரண்டு அங்குல நீளமுள்ள பஞ்சு ஒன்று சாலையில் கிடப்பதைக் கண்டார். தன்னுடன் வருபவர்களிடம் அதைச் சுட்டிக்காட்டிவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தார் காந்திஜி.உடன் வந்தவர்களில் ஒரு பெண்மணி, 'சுற்றுப்புறத் தூய்மையில் நாட்டம் கொண்ட பாபுஜிக்கு, சாலையில் கிடக்கும் இந்த பஞ்சு உறுத்தலாக உள்ளது போலும்' என்ற எண்ணத்தில் அதை எடுத்துக் கொண்டாள்!மாலையில், மௌன விரதத்தை நிறைவு செய்தார் காந்திஜி. பிறகு, தனது ராட்டையை எடுத்து நூல் நூற்க அமர்ந்தவர், சாலையில் இருந்து எடுத்து வந்த பஞ்சுத் துண்டை தரும்படி அந்தப் பெண்ணிடம் கேட்டார்.அவள் திகைத்தாள். ''சிறிய பஞ்சுதானே என்று அதைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டேன் பாபுஜி'' என்றாள் தயக்கத்துடன். காந்திஜியின் முகம் மாறிற்று. ''இதுவே, ஒரு தம்பிடியாக இருந்திருந்தால், மிகச் சொற்பமான காசுதானே என்று தூக்கி எறிந்திருப்பாயா?'' என்று கேட்டார். ''எறிந்திருக்க மாட்டேன்'' என்றாள் அவள்.''பருத்தியைப் பயிரிடுவதிலும் அதைச் சுத்தப்படுத்திப் பஞ்சாக்குவதிலும் எவ்வளவு உழைப்பு செலவாகிறது என்று உனக்குத் தெரியாதா? அதை எறிந்தவன் பாவம் செய்து விட்டான் என்பதில் சந்தேகமே இல்லை. இதுகுறித்து பலமுறை விளக்கியும் இதன் மதிப்பை உணராத நீ, இரட்டைக் குற்றம் செய்தவள் ஆகிறாய். போ... போய் அதைக் கொண்டு வா!'' என்றார் காந்திஜி. ஓடோடிச் சென்ற பெண்மணி, குப்பைத் தொட்டியில் இருந்து அந்த பஞ்சைத் தேடிப் பிடித்து எடுத்து வந்தாள்.அதை வாங்கிக் கொண்ட காந்திஜி, ''துணியாக நெய்த பிறகு, இதன் அழுக்கை எளிதில் அகற்றி விடலாம்'' என்றபடி, தான் ஏற்கெனவே வைத்திருந்த பஞ்சுடன் சேர்த்து நூல் நூற்க ஆரம்பித்தார். அவரது எளிமை மற்றும் சிக்கனத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்!
3 comments:
தெரியாத சில விடயங்களை அறிவது மனதுக்கு இதமாக இருக்கிறது! மகாத்மாவைப் பற்றிய பதிவை இடுகை செய்தமைக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும்!
காந்தி பற்றிய சர்ச்சைகள் தமிழ்நாட்டில் இன்னமும் முடிந்த பாடில்லை.இருந்தும் நல்லலவைகளையே சிந்திக்க வேண்டும் என்று எண்ணத்தூண்டுகின்ற பதிவிற்கு நன்றி.
தமிழ்சித்தன்
தங்களின் பின்னுட்டங்களுக்கு நன்றி
Post a Comment